.ஆஸ்திரேலியா தடுப்பு முகாமில் இருந்த ஈழத்தமிழ்ப்பெண் விடுதலை

கடந்த மூன்றரை ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் இருந்த ரஞ்சனி என்ற ஈழத்தமிழ்ப்பெண் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஈழப்போரில் தனது கணவனை இழந்த ரஞ்சனி 8 மற்றும் 6 வயது நிரம்பிய இரண்டு
பிள்ளைகளுடன் படகுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தார்.
அதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட ரஞ்சினியும் குழந்தைகளும் இறுதியாக பிறிஸ்பேர்ணிலுள்ள சமூக தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். அத்துடன் 2011 செப்டம்பரில் அவருக்கு அகதி அந்தஸ்தும் வழங்கப்பட்டது.
இருந்தபோதிலும் ASIO எனப்படும் ஆஸ்திரேலிய புலனாய்வு நிறுவனத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த அறிக்கை சாதகமானதாக இருந்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்கான நிரந்தர அனுமதி அவர்களுக்குக் கிடைக்கும்.
இந்த பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைக்காக காத்திருந்த காலத்தில் கணேஸ் என்ற ஈழத்தமிழரைச் சந்தித்த ரஞ்சனி அவருடன் ஏற்பட்ட புரிந்துணர்வையடுத்து இருவரும் 2012 ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டார்கள்.
குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுடனேயே இந்தத்திருமணம் இடம்பெற்றது.
இந்தநிலையில் 2012 மே மாதம், அதாவது திருமணமாகி ஒரு மாதத்தில்
மெல்பேர்ண் குடிவரவுத் திணைக்கள அலுவலகத்திற்கு மாதாந்த நேர்காணலுக்கென அழைக்கப்பட்ட ரஞ்சனியும் அவரது இரண்டு பிள்ளைகளும் அங்கிருந்து நேரடியாக சிட்னியிலுள்ள விலவூட் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள்.
ரஞ்சனியும் அவரது இரு பிள்ளைகளும் ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று ஆஸ்திரேலியாவின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்திருந்தமையே இவர்கள் அங்கு அனுப்பபட்டதற்கான காரணமாக சொல்லப்பட்டது.
கணவரிடமிருந்து பிரிக்கப்பட்டு விலவூட் தடுப்பு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் ரஞ்சனி கருவுற்றிருப்பது தெரியவந்தது. அப்போதும் ரஞ்சினி விடுதலை செய்யப்படாத நிலையில் ரஞ்சினி-கணேஸ் தம்பதியின் மகன் விலவூட் தடுப்பு முகாமிலேயே பிறந்தான்.
விலவூட் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட நாள் முதல் தற்போது வரையான மூன்றரை ஆண்டு காலப்பகுதியில் ரஞ்சனியை வெளியே கொண்டுவருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று(12.11.2015) விடுதலை செய்யப்பட்டார்.