பிரித்தானிய பிரதமரை விட கூடுதலாக ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள்

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனை விட 500க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் கூடுதலாக ஊதியம் ஈட்டி சொகுசான வாழ்க்கை நடத்தி வருவதாக அந்நாட்டு சான்சலர் பரபரப்பு தகவலை
வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய சான்சலரான ஜோர்ஜ் ஓஸ்போர்ன் நேற்று இரவு செய்தியாளர்களின் சந்திப்பில் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தகவல்கள் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றப்பட்ட அந்த தகவலில், பிரித்தானிய அரசு துறையின் ஒரு அங்கமான கவுன்சில் தலைவர்களில் 537 பேர் பிரதமரை விட கூடுதலான ஊதியம் ஈட்டி வருகின்றனர்.
இந்த ஊதியமானது, அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகளுக்கு ஆகும் செலவினங்களும் அடங்கும்.
அரசு சலுகைகள் சேர்த்து பிரதமர் டேவிட் கமெரூன் கடந்த வருடம் 1,42,500 பவுண்டுகள் பெற்றுள்ளார்.
ஆனால், 537 கவுன்சில் தலைவர்கள் இந்த வருமானத்தை விட கூடுதலாக வருமானம் ஈட்டியுள்ளனர்.
குறிப்பாக, பெயர் வெளியிடப்படாத ஒரு கவுன்சில் தலைவர் கடந்த வருடம் 4,11,025 பவுண்டுகளும், மற்றொரு கவுன்சில் தலைவர் 3,96,143 பவுண்டுகளும் பெற்றுள்ளனர்.
இதை தவிர, 3,483 கவுன்சில் ஊழியர்கள், 50,084 அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 7,554 அரசு பல்கலைகழக ஊழியர்கள் என இவர்கள் அனைவரும் கடந்த வருடம் மட்டும் 1,00,000 பவுண்டுகளுக்கு அதிகமாக வருமானம் பெற்றுள்ளனர் என ஜோர்ஜ் ஓஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசியபோது, ‘மக்களின் வரிப்பணத்தை கவுன்சில் தலைவர்கள் தங்களுடைய ஆடம்பரமான வாழ்க்கைக்கு பயன்படுத்த கூடாது’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தடுக்கும் விதத்தில், அரசின் கீழ் உள்ள 4 முக்கிய துறைகளின் செலவினங்களை 30 சதவிகிதம் அளவிற்கு குறைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி வெளியிடப்படும் என ஜோர்ஜ் ஓஸ்போர்ன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.