சுவிஸில் பட்டப்பகலில் வங்கியில் துணிகரமாக கொள்ளையடித்த நபர்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் பட்டப்பகலில் புகுந்து ஆயிரக்கணக்கான பிராங்குகளை அள்ளிச்சென்ற முகமூடி கொள்ளைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவிஸின் பேசில் மண்டலத்தில் உள்ள Nunningen என்ற நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Mala Strana 6 பகுதியில் Raiffeisen என்ற வங்கி இயங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கையில் ஆயுதம் ஏந்தியவாறு வங்கிக்குள் புகுந்துள்ளான்.
வங்கியில் இருந்த ஊழியர்களை முகமூடி கொள்ளையன் ஜேர்மன் மொழியில் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்.
கொள்ளையனின் மிரட்டலுக்கு ஊழியர்கள் அஞ்சியதால், உள்ளே புகுந்த அவன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பிராங்குகளை அள்ளிக்கொண்டு அங்கிருந்து Grellingen நகரை நோக்கி தப்பியுள்ளான்.
வங்கி கொள்ளை தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளித்த பின்னர், வங்கியில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த கொள்ளையனின் உருவப்படங்களை சேகரித்தனர்.
எனினும், வங்கியில் ஊழியர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
30 முதல் 40 வயதுடைய கொள்ளையன் குறித்து தகவல்களை வெளியிட்ட பொலிசார் மர்ம நபர் குறித்து தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகமூடி அணிந்த மர்ம நபர் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.