மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் சுவிஸ்: அதிர்ச்சி தகவல்

உலகளவில் உள்ள மிக மோசமான விமான நிலையங்களை கொண்ட முதல் 5 நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இடம்பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் வெளியாகும் ஒரு தனியார் பத்திரிகை சர்வதேச அளவில் மிக மோசமாக
பராமரிக்கப்படுவதுடன், தரமற்ற சேவைகள் வழங்கும் விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், சுவிஸின் ஜேனிவா நகரில் உள்ள Cointrin விமான நிலையம் 4வது இடத்தை பிடித்துள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்து நாடு பல துறைகளில் முன்னேறியிருந்தாலும், மேலே குறிப்பிட்ட விமான நிலையத்தை பராமரிப்பதிலும், பயணிகளுக்கு தரமான சேவை வழங்குவதிலும் சுவிஸ் நாடு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொண்ட பயணிகள், அவர்களின் அனுபவத்தை சுவிஸ் பத்திரிகை ஒன்றில் பகிர்ந்துள்ளனர்.
Cointrin விமான நிலையத்தில் வரும் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை.
மேலும், பயணிகளை பரிசோதனை செய்யும் பகுதியில் எந்த நேரமும் பயணிகள் நிரம்பி வழிவது, விமான நிலையத்தில் ’லிஃப்ட்’ வசதிகள் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல குறைபாடுகள் இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், Cointrin விமான நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுவதாகவும், பிற விமான நிலையங்களில் இருப்பது போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் இருப்பதாகவும் சில பயணிகள் ஆய்வு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய பத்திரிகை மேற்கொண்ட ஆய்வில் பிரான்ஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையம் முதல் இடத்திலும், இத்தாலியில் உள்ள Fiumicino விமான நிலையம் 2வது இடத்திலும், ரஷ்யாவில் உள்ள Sheremetyevo விமான நிலையம் 3வது இடத்திலும், சுவிஸின் ஜெனிவா (Cointrin) விமான நிலையம் 4வது இடத்திலும், ஆப்பிரிக்காவில் உள்ள Jomo Kenyatta விமான நிலையம் கடைசி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.