மலேசிய விமானத்தின் எச்சங்கள் என நம்பப்படும் மேலும் சில பாகங்கள் மீட்பு!

காணாமற்போன MH370 மலேசிய விமானத்தின் எச்சங்கள் என நம்பப்படும் மேலும் சில பாகங்கள் பிரான்ஸின் றியூனியன் தீவில் கரையொதுங்கி இருப்பதாக அங்குள்ள உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

சீன, மற்றும் மலேசிய எழுத்துக்கள் காணப்படும் உலோகச்சிதைவுகள் இவற்றில் அடங்கியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தின் கதவினை ஒத்த உலோகப்பாகம் ஒன்றும் பிறிதொரு இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மீட்கப்பட்ட- விமான இறக்கையின் ஒரு பகுதி என நம்பப்படும் பாகம் பரிசோதனைகளுக்காக பிரான்சின் துளுஸ் (Toulouse) பகுதியில் இயங்கும் விமான விபத்துகள் சம்பந்தமான பாதுகாப்பு ஆய்வகத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.
இதனிடையே - விமானத்தின் சிதைவுகள் என நம்பப்படும் பல்வேறு பொருள்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரேயே றியூனியன் தீவுக்கரைகளில் ஒதுங்கியிருக்கின்றன என்ற தகவலை ,அத்தகைய பாகங்களை அங்கு நேரில் கண்டோர் சிலர் இப்போது வெளியிட்டிருக்கின்றனர்.
விமானத்தின் இருக்கை, பயணப் பைகள், சீன எழுத்துகள் பொறித்த போத்தல்கள் என்பன அவையாகும்.சாதாரணமாக கடற்கரைகளில் காணப்படும் பொருள்கள் என எண்ணி அவற்றைத் தாம் அலட்சியம் செய்ததை அவர்கள் இப்போது நினைவுகூர்ந்துள்ளனர்.
கடற்கரையில் கழிவுப் பொருள்களை அகற்றிச் சுத்திகரிக்கும் ஒருவர், தாம் கண்டெடுத்த நீல நிறத்திலான இருக்கை ஒன்றையும் பயணப் பைகள் இரண்டையும் எரித்து விட்டார் எனத் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து தீவின் கரைகள் முமுவதும் எச்சங்களைத் தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 239 பேருடன் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு தடயம் தெரியாமல் மறைந்த மலேசிய விமானம் தொடர்பான பல மர்மங்கள் தற்போது மீட்கப்பட்டிருக்கும் சிதைவுகளால் துலங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.