கணவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வீசா மறுப்பு: மனைவி தற்கொலை முயற்சி.

கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் அகால மரணமடைந்த கணவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்துகொள்ள இலங்கையிலுள்ள ஆஸி. தூதரகம் வீசா அனுமதி நிராகரித்தனால்
மனமுடைந்த பெண் ஒருவர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ள
சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரிய வருவதாவது,
கடந்த 17.07.2015 அன்று அவுஸ்திரேலியா, சிட்னியின் கிறைஸ்ரைன்ஸ் நகரில் வசித்து வந்த மட்டக்களப்பினை சேர்ந்த நவரெட்ணம் அஜந்தன் என்னும் புகலிடக் கோரிக்கையாளர் படுக்கையறையினுள் விபத்து கரணமாக அகால மரணமடைந்துள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் நிலவி வரும் அதிக குளிர் காரணமாக தமது படுக்கையறையினுள் இலத்திரனியல் வெப்பமாக்கியுடன் இறைச்சி வாட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சூடான மணிகளையும் (charcoal heat beads) வைத்து உறங்கியுள்ளார். இதன்போது வெளியான காபன் மொனோ ஒக்சைட் (carbon monoxide toxicity) என்னும் வாயு வெளியான நிலையிலையே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அஜந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டுசெல்வதனால் அவரது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கான வீசா பெறுவதற்காக விண்ணப்பித்த போது அவ்விண்ணப்பம் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
மீண்டும் அஜந்தனின் மனைவி தன்னுடைய இரண்டு வயது கைக்குழந்தையை இலங்கையில் உறவினர்களுடன் விட்டுவிட்டு இறுதிக்கிரியைகளுக்காக தனது மகனை மட்டும் அழைத்துச்செல்வதற்காக விண்ணப்பித்த போதிலும் இரண்டாவது தடவையும் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் அஜந்தனின் உடல் எதிர்வரும் புதன்கிழமை (19-08-2015) lidcombe rook wood cemetery ல் பி.ப 3.00 மணிதொடக்கம் பி.ப 4.00 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 4.00 மணியளவில் தகனக்கிரியைகள் மேற்கொள்ள நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது கணவரது உடல் இலங்கைக்கு கொண்டுவர முடியாததுடன் தாமும் இறுதிச்சடங்கிற்காக அவுஸ்திரேலியா செல்லமுடியாத நிலையினை எண்ணி வருந்திய அஜந்தனின் மனைவி மனமுடைந்து தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தற்போது அஜந்தனின் மனைவி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.