
அண்மைக்காலங்களில் அதிக தமிழ் இளையோர் மரணமான செய்திகளை நாம் கேட்டு வருகிறோம். இதில் போக்குவரத்து முறைகேடுகள் மூலமே அவலமான முறையில் இறப்போர் தொகை அதிகரித்து வருகிறது. அவுஸ்திரேலிய நாட்டில் படகுகள் மூலம் வந்து தங்கியிருப்போர்
போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை செலுத்தி பல தண்டனைகளை அனுபவித்து வருகின்ற போதிலும் அனேகமானோர் மீண்டும் மீண்டும் குற்ற செயல்களை செய்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களில் பலர் தங்களது சாரதி பத்திரங்களை இழந்தும் இருக்கிறார்கள். மது போதையில் வாகனம் ஓட்டுவது, சண்டை போடுவது போன்ற சமூக விரோத செயல்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இறந்தவர்களும் சிலர். மேலைத்தேய கலாச்சாரத்தில் மது அருந்துவது சாதாரண விடயமாக இருந்த போதிலும் அவர்கள் அதனை முறையாக அருந்தி வருகிறார்கள். நம்மவர்கள் மதுவை முறைகேடாக அருந்தி தமிழினத்தின் மானத்தை காற்றில் பறக்க விடுகிறார்கள். பலர் சூதாட்டங்களில் பணங்களை அழித்து வருகிறார்கள்.
இனத்துக்காக தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்கள் பிறந்த இனத்தில் பிறந்த நாம் இவ்வாறு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உலகில் எம்மை இழிந்த சமுதாயமாக நிலைநாட்ட முயற்சிப்பது வேதனை தருகிறது.
விருந்துபசாரங்களுக்கும் மது அருந்துவதுக்கும் மற்றும் பல கேளிக்கை நிகழ்வுகளுக்கும் முன்னிற்கும் இந்த சமுதாயம் எமக்காக உயிர் ஈந்த மாவீரர் நாள் நிகழ்வுகளையோ மற்றைய நினைவேந்தல் நிகழ்வுகளையோ தவிர்த்து வருவதும் வேதனையான விடயம்.
தமிழ் இளையோரே! எம் ஒவ்வொருவர் பின்னாலும் பொறுப்பு இருக்கிறது. எங்கள் குடும்பமோ அல்லது எங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட உறவுகளோ எவரோ இருப்பார். அவர்களை நாம் தவிக்க விடாமல் அவர்களுக்காக நாம் ஒழுக்கமுடையவராக வாழ்வோம். தேசத்தின் சட்டங்களை மதித்து நடவுங்கள். அது உங்கள் பாதுகாப்பு மட்டுமல்ல எங்கள் இனத்தின் பாதுகாப்புமே.
- அகதியான தமிழன்