ஜப்பானின் பூ மலை! காலடியில் சொர்க்கம்

 வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கும்போது, மனம் மயங்கும். ஒரே இடத்திலேயே லட்சக்கணக்கான பூக்கள்! எந்தப் பக்கம் திரும்பினாலும் பிங்க் கலர் பூக்களின் காட்சிதான். இதை, நேரில் சென்று ரசிக்க வேண்டுமா?

ஜப்பானில் உள்ள ஃபுஜி (Fuji) மலையில்தான் இந்தத் தோட்டம் இருக்கிறது. இங்கு, சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ‘ஷிபாஜாகூரா’ (Shibazakura) மலர்கள் மலர்ந்து, மலையையே இளம் சிவப்பாக மாற்றிவிடும்.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே பூக்கும் இந்த மலர்களை, ‘பிங்க் மோஸ்’ (Pink Moss) என்று அழைக்கிறார்கள். இந்தச் சமயத்தில், ‘ஷிபாஜாகூரா’ எனும் திருவிழாவும் நடைபெறும். வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், இந்த மலர்க் காட்சியைக் காண வருகின்றனர். இந்தப் பூந்தோட்டம், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.

1956-ல் இருந்து பூச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பூச்செடிகள், 10 செ.மீ உயரமே வளரும். இந்த பூந்தோட்டத்துக்குள் வர, பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், பெட் அனிமலோடு வர அனுமதி இல்லை.
மின் விளக்கு அலங்காரங்களுடன் இரவில் பார்ப்பது கூடுதல் அழகு என்பதால், இரவிலும் இந்தத் தோட்டத்தைப் பார்க்க வருகிறார்கள். இந்தத் தோட்டத்தை ஆகாயத்திலிருந்து ரசிக்க, ஹெலிக்காப்டர் வசதியும் உண்டு.