யாழ்ப்பாணத்தில் போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - யாழ். பொலிஸ்

யாழ். மாவட்டத்தில் போதைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வடக்கில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான பல்வேறு செயற்றிட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த காலத்தில் விசேட ரோந்து நடவடிக்கைகள், பாடசாலை சூழல் கண்காணிப்பு, நகரின் மத்தியில் கண்காணிப்பு என பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம்.
அதனைத் தொடர்ந்து தற்போது மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனை பாவனை ஆகிய செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதையே பிரதான இலக்காக கொண்டு இக்குழு செயற்படவுள்ளது.
இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புக்ளையும் எதிர்பார்க்கின்றோம். மேலும் வீதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையிலும் ஆள்நடமாட்டமின்றிய பகுதிகளில் காரணமின்றி நிற்பவர்களை நாம் கைது செய்வோம்.
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுபவர்கள், போதையில் சமூகத்தில் குழப்பம் விளைவிப்பவர்கள் மீது ஒருபோதும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.
அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அதேநேரம் சிறுவர்கள் பாதுகாப்புத் தொடர்பாக பெற்றோர்கள், சமயத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் அனைவரும் விழிப்பாக இருக்கவேண்டும்.
பொலிஸாரின் உதவி தேவைப்படும் பட்சத்தில் நிச்சயம் அதனை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம் என்றார்.