புங்குடுதீவில் “வித்தியா கீதங்கள் ” பாடல் இறுவெட்டு வெளியீடு

அன்புச் சகோதரி வித்தியாவின் நினைவுகளைத் தாங்கி கிளியூர் ரமணன், சிவா றதீஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவான ” வித்தியா கீதங்கள் ” என்ற பாடல் இறுவெட்டு கடந்த 26.06.2015 அன்று வித்தியா கல்வி பயின்ற பாடசாலையான யா/புங்குடுதீவு ம.வி பிரதான மண்டபத்தில் வெளியிடப்பட்டது
.
புங்குடுதீவு இளைஞர் கழக தலைவர் சதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் யாக்கிரத சைத்தண்ய சுவாமிகள், தொன் பொஸ்கோ கிளிநொச்சி பயிற்சி நிலைய நிர்வாக இயக்குனர் பாதிரியார் சேவியர் அடிகளார், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கலட்டி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய பிரதம அர்ச்சகர் பிரபா ஐயா ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைக்க வித்தியாவின் குடும்பத்தினர் முதல்ப்பிரதியை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாதிரியார் சேவியர் அடிகளார் உரை நிகழ்த்துகையில், சகோதரி வித்தியாவின் மரணம் கொடுமையிலும் கொடுமை. எந்தக் காலத்திலும் எந்த சமூகத்தாலும் மறக்கப்பட முடியாதது. இனிமேலாவது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய கொடிய சக்திகளை எமது தேசத்தில் இருந்து வேருடன் அகற்ற வேண்டும்.
வித்தியா எமக்கு சொல்லிச் சென்றிருக்கும் செய்தியும் அதுதான். விழிப்புடன் இருந்து பெண்மையையும், சிறுவர்களையும், எம் தேசத்தையும் காப்போம் என்றார்.
தொடர்ந்து இறுதியில் கிளியூர் ரமணனின் ஏற்பாட்டில் அன்புச் சகோதரி வித்தியாவின் நினைவுகளைத் தாங்கி வித்தியாவின் தாயாரின் பொற்கரங்களால் பாடசாலை வளாகத்தில் தென்னை மரக்கன்று ஒன்று நாட்டப்பட்டது.