கணவனுக்கு 111; மனைவிக்கு 101….

இன்றைய காலகட்டத்தில் உணவுமுறைகள், பழக்கவழக்கங்கள் மனிதனின் ஆயுட்காலத்தை சரிபாதியாக குறைத்துவிட்டது. 40 வயதை நெருங்கும்போதே கலர் கலர் மாத்திரைகள் நமது பாக்கட்டுகளில் நிரந்தரமாகிவிடுகின்றன.

பிபி, சுகர், இடுப்புவலி, கால் வலி என வியாதிகள் நமது நெருங்கிய நண்பனாகிவிடுகிற இந்த சூழலில், அந்தக் கால ஆரோக்கிய வாழ்க்கைககு உதாரணமாக வாழ்கின்றனர் வெங்கடேசன் -ஆனந்தாயி தம்பதியர். காதில் புகைவராமல் பார்த்துக்கொள்ளுங்கள், இருவருமே சென்சுரியை தாண்டிய வயதினர்.
தனது 110வது பிறந்தநாளை தனது மனைவி 101வயது ஆனந்தாயி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார் இந்த ஸ்ட்ராங் தாத்தா வெங்கடேசன். பேரன், பேத்திகளுடன் தனது 111வது பிறந்தநாளை ஏழைகளுக்கு அன்னைதானம் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினர். உறவினர்கள், வெங்கடேசன் தம்பதியினரி டம் ஆசிகள் பெற்று அமர்க்களமாக நடந்தேறியது அவரது பிறந்தநாள்.
இது குறித்து பேசிய அவரது மகன் பாண்டியன், “எங்க அப்பாவோட 110வது பிறந்தநாளை நாங்க சிறப்பாக கொண்டாடி வருகிறோம். எங்க அம்மா அப்பா இவ்வளவு வயசு வரைக்கும் இருக்கறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாவும், ரொம்ப பெருமையாவும் இருக்கு. 6 மகன்கள், 2 மகள்கள்னு நாங்க மொத்தம் 8 பேர்.
நாங்க எல்லோரும் சேர்ந்து எங்க அப்பாவுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இது எல்லாருக்கும் கிடைத்திடாத வாய்ப்பு. அப்பா – அம்மாவின் இந்த சாதனைக்கு காரணம் விவசாயம். இவர் ஒரு விவசாயி, அப்பாவுக்கு மது, சிகரெட் னு எந்த கெட்டபழக்கமும் கிடையாது.
இயற்கை உணவுகள், கூழ், கஞ்சி, பழங்கள், போன்ற ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட்டதும்தான் இவ் வளவு வயது வரை வாழ முடிந்தது. எங்க அப்பா – அம்மா சார்பாக கடவுளுக்கு நாங்க நன்றி சொல்லணும்” என்று உணர்ச்சிவயப்பட்டார்.
நுாறாண்டு வயத வரை வாழ்வது என்பது பொதுவாக மனிதர்களின் ஆசை. ஆனால் அது எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அசராத உழைப்பும், அளவான உணவுக்கட்டுப்பாடும் வெங்கடேசன் தம்பதியரை இன்னும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
இவ்விருவரையும் கண்டு ஆசீர்வாதம் வாங்க கூட்டம் அலை மோதியது. இவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ, வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துவோம்.