தமிழ் மண்ணை ஆள்பவர்களே!! வலிகாமம் மக்கள் தமது கிணற்று நீரைக் குடிக்கலாமா? கூறுங்கள் உண்மையை

வலிகாமம் மக்கள் தமது கிணற்று நீரினைக் குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? தமிழ் மண்ணை ஆள்பவர்களே கூறுங்கள்?
ஆறுதல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 29.03.2015 சனிக்கிழமையன்று “யாழ் குடாநாட்டில் மாசடைந்து வரும் தரைக்கீழ் நீர்வளம்” எனும்
தலைப்பில் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஆறுதல் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.
இதில் சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர். இரா.சிவசந்திரன் யாழ் குடா சுண்ணக்கற் பாறையமைப்பும் தரைக்கீழ் நீரும், எனும் பொருள் பற்றி கருத்துரை வழங்கினார்.
தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக் காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின்றது. வடமாகாணத்தின் மொத்தக் குடித்தொகையில் 70 வீதத்தினர் யாழ் குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.
புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத்தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசின் காலச் சுண்ணாம்பு பாறையமைப்பைக் கொண்டுள்ளன.
இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக்கூடிய தன்மை வாய்ந்தவையாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண், மணல் என்பன நீரை உட்புகவிடும் இயல்பை அதிகளவு கொண்டவையாக அமைந்துள்ளன.
மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர் நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது.
குடாநாட்டின் கரையோரப்பகுதிகளிலிருந்து மையப்பகுதியை நோக்கிச் செல்லும் போது இவ்வில்லையின் தடிப்பு அதிகரித்து செல்கின்றது. ஆகக்கூடிய தடிப்பு 100 அடி முதல் 110 அடி வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர் நீர் ஏரிகளினால் துண்டாக்கப்பட்டுள்ளன.
யாழ் குடாநாட்டின் நன்னீர் வில்லைகளை 4 ஆக அடையாளம் காணலாம்.
1.வலிகாமம் (சுன்னாகம்) நன்னீர் வில்லை
2.வடமராட்சி நன்னீர் வில்லை
3. தென்மராட்சி நன்னீர் வில்லை
4.தீவுப்பகுதி (சாட்டி) நன்னீர் வில்லை
சுண்ணக் கற்பாறைப்படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ் பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் மேற்பகுதியிலும் காணப்படுகின்றன.
இதனால் அதிகம் ஆழமற்ற கிணறுகளை தோண்டுவதன் மூலம் யாழ்;ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது.
மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் கேம்ரியன் யுகத்திற்குரிய தொல்காலப்பாறை அடிப்பாறையாக அமைந்துள்ளது.
இதன் மேலே அடையல் மண் படிவுகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் குடியிருப்பின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிணறுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக்குடிப்பதற்காகவும், விவசாயத்திற்காகவும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு.
கிணறுகளில் இருந்து மனிதசக்தியால் குறிப்பாக துலா மூலமும், உள்ளுர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை பிற்பட்ட கால கட்டங்களில் உப உணவுச்செய்கை என சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச்செய்கை முறையாக மாறிய பின்னர் நீர் இறைக்கும் இயந்திரத்தின் பாவனை யாழ் குடாநாட்டின் சகல கிராமங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.
மிகையான பாவனையால் அண்மைக் காலங்களில் குடாநாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ் நீர் உவர் நீராதல் போன்ற பிரச்சனைகள் தோன்றியுள்ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்பதில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்ல முறையில் எதிர்கொள்வதற்கும் யாழ்ப்பாணக் குடாநட்டில் உள்ளார்ந்த தரைக்கீழ் நீர்வளம், அதன் பாவனை, அவற்றின் முகாமைத்துவம், அபிவிருத்தி என்பவைகள் பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். தற்போது யாழ் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் மனிதனின் முறையற்ற பாவனையால் மாசiடைந்து வருகின்றது.
நகரப்பகுதிகளில் மலசல கூடங்கள் கிணற்றுக்கருகே அமைந்துள்ளமையால் ‘ஈகோலின்’ கலப்பும், கிராமப்புறங்களில்;, விவசாயச் செய்கைக்கு அதிகளவு பயன்படுத்தும் கிருமிநாசினி, களைநாசினிகளினால் “நைற்றேட்” கலப்பு தரைக்கீழ் நீரை மாசாக்கியுள்ளன.
மேலும் அண்மைக்காலத்தில் சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி இயந்திரத்தினால் கழிவு ஒயில் கலப்பு வலிகாமம் தரைக்கீழ் நீர் வில்லையில் கலந்துள்ளதாக பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. ஒயில் மிதப்பது கிணற்று நீரில் வெற்றுக் கண்களுக்கே தெரிகின்றதென மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இதனை உடனடியாக சுத்திகரிக்காவிட்டால் 2,50,000 மக்களும் அவர்களின் எதிர்கால சந்ததிகளும் பாதிக்கப்பட போகின்றார்கள். ஆய்வு – ஆய்வு என ஆய்வறிக்கைகள் எதிரும் புதிருமாக வருகின்றன. மக்களுக்குத் தேவை வலிகாமத்தில் கிடைப்பது குடிக்கக்கூடிய தூய நீரா அல்லவா என்பதே. நீரின் இரசாயனவியல் அல்ல. வடமாகாண சபையில் அமைக்கப்பட்ட ‘நிபுணர் குழு’ நீரின் இரசாயனவியலை பத்திரிகைகள் ஊடாக மக்களுக்கு கற்பிக்கின்றது. வடமாகாண ஆட்சியிலுள்ள பொறுப்பான அமைச்சரோ, முதலமைச்சரோ இவ் அனர்த்தம் தொடர்பாக மௌனம் சாதிக்கின்றார்கள்.
இதுவா தமிழர் தமிழரை ஆட்சி செய்யும் முறை. இதற்காகவா 67 வருடப் போராட்டம். இது பற்றி தமிழ் கட்சிகளின் கொள்கை என்ன? வலிகாமம் மக்கள் தம் பிரதேசத்து கிணற்று நீரை குடிக்கலாமா? குடிக்க முடியாதா? இக்கேள்விகளை பேராசிரியர் தனது கருத்துரையில் முன்வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் தயா சோமசுந்தரம் தனது கருத்துரையில் சுற்று சூழல் பேரழிவு பாரிய அளவில் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள வலிகாமத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
வலிகாமத்தில் வாழும் 2,50,000 எண்ணிக்கையிலான மக்கள், தங்கள் நிலத்தடி நீர் கழிவு எண்ணையால் மாசாகிக் கொண்டிருப்பதாக மெதுவாக உணர்ந்து வருகின்றனர். மின்பிறப்பாக்கி நிலையத்தை சுற்றியுள்ள 1.5 கி.மீ விட்டமான பிரதேசத்தில் 2013-2014 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகளின்படி, பெருமளவிலான கிணறுகள் (அண்ணளவாக 73%) கழிவு எண்ணையால் மாசுபட்டு இருக்கின்றது.
நீண்ட காலத்தில் இந்த மாசினால் புற்றுநோய், கருச்சிதைவுகள், குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்புகள், தோல், மற்றும் உள ஆரோக்கியம் இன்மை என்பன ஏற்படலாம். ஏற்கனவே இது பற்றி பரந்த எச்சரிக்கை, அச்சம், கவலை, பீதி மற்றும் குழப்பம் போன்றன மக்கள் மத்தியில் இருப்பினும், இது குறித்த ஆபத்துகள் என்ன? அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த பேரழிவினை கட்டுப்படுத்த மத்திய, மாகாண அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பன பற்றி மக்களிற்கு அறிவ+ட்டப்படவில்லை.
மாறாக, அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் தெளிவான தகவல் இல்லாமல், அங்கு ஆதாரமற்ற வதந்திகள், தவறான தகவல்கள், அனுமானங்கள், பிழையான கோட்பாடுகள், பயம் மற்றும் அமைதியின்மை என்பனவே இருக்கின்றன. சுன்னாகம் அனல் மின்பிறப்பாக்க நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் உள்ள நீரில் தடித்த மிதக்கும் எண்ணெய் படலம் இருப்பது வெற்றுக் கண்ணிற்கே தென்படுகின்றதென்றால், நுண்காட்டி மூலம் நோக்குகையில் அது அப்பகுதியில் முழு நிலத்தடி நீரினையும் மாசுபடுத்தியிருப்பதாகவே தென்படும்.
புகுஷிமா அழிவுகள், செர்னோபில் அணு பேரழிவுகள், போபால் விச வாயு கசிவு மற்றும் சூடான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட வறட்சி போன்ற நிலைகளால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் போல நாமும் இடம்பெயர வேண்டி நிலை ஏற்படுமா? தெற்கில் கம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவேரியாவில் நிகழ்ந்ததைப் போல நீர் மாசடைவது தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி அமைதியான முறையில் வலிகாம பகுதி மக்கள் எதிர்ப்பார்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள்.
இப்பகுதி மக்களை வெகுவாக அச்சுறுத்தும் பிரச்சனையாக நீர் மாசடைவதற்கான மூல காரணியை உடனடியாக கண்டறிந்து அதனை நீண்டகால நோக்கில் தீர்ப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை மத்திய, மாகாண அரசுகள் எடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.
பல புத்தி ஜீவிகள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கில் மருத்துவர் நச்சினார்க்கினியன், மருத்துவர் சுதாகரன், எந்திரி கலாநிதி விக்னேஸ்வரன், கலாநிதி மோகனதாஸ் போன்றோரும் தமது கருத்துரைகளைப் பகிர்ந்து கொண்டனர்.