வெடிபொருட்கள் அகற்றப்படாத நிலையில் : அச்சத்தில் வளலாய் மக்கள்

வளலாய் பகுதியில் அண்மையில் மீள் குடியேறியும் வெடி பொருட்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
மக்கள், கடந்த மாதம் வளலாய் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து அப்பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து சொந்த இடங்களில் மீள் குடியேறி வருகின்றார்கள். 
 
தாம் காணிகளை துப்பரவு செய்யும் போது வெடி பொருட்கள் காணப்படுவதனால் தாம் அச்சத்துடனேயே துப்பரவு பணிகளை மேற்கொள்வதாக மக்கள் தெரிவித்ததுடன் காணிகளை துப்பரவு செய்யும் போது வெடிக்காத நிலையில் எறிகணைகள், துப்பாக்கி ரவைகள் போன்ற வெடி பொருட்கள் காணப்படுகின்றன. 
 
நேற்றைய தினம் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரியூட்டும் போது அதனுள் இருந்த வெடிபொருள் பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. 
 
குப்பையை எரியூட்டிய பின்னர் அதன் அருகில் எவரும் இல்லாத காரணத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோன்று கடற்தொழிலுக்கு கடலுக்குள் செல்லும் வழியில் 5 எறிகணைகள் கடலினுள் காணப்படுகின்றது. 
 
அது தொடர்பில் வெடிபொருள் அகற்றும் பிரிவுக்கும் இராணுவத்தினருக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். அவர்கள் வந்து பார்த்துவிட்டு போனார்கள். 
 
எனினும், ஒரு வார காலமாகியும் அதனை அகற்ற எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாம் கடலுக்கு செல்லும் போது அச்சத்துடனேயே சென்று வருகின்றோம். எனவே, நாம் மீள் குடியேறியுள்ள பகுதிகளில் உள்ள வெடி பொருட்களை அகற்றி அச்சமின்றி வாழ்வதற்கு ஏற்றவாறான சூழரை ஏற்படுத்தித் தர வேண்டும் என குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.