நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்: மண்ணில் புதைந்த கட்டிடங்கள்...800 பேர் பலி

நேபாளத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு(Kathmandu) நகரின் மேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் 11.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.9 அலகுகளாகப் பதிவாகி இருந்தது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தால் காத்மாண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து விழுந்து மண்ணோடு மண்ணாக புதைந்தன.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டுவில் இருந்த 19ம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான "தராஹரா"(Dharahara) கோபுரம் முழுமையாக இடிந்து விழுந்தது.
இதில் அங்கிருந்த 450 பேர் மண்ணில் புதையுண்டு இடிபாடுகளில் சிக்கி 800 பேர் பலியாகியுள்ளனர் என நேபாள மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தால் காத்மாண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. நேபாளம் முழுவதும் கைப்பேசி சேவை முடங்கிப் போனது.
மேலும் சாலைகள் பள்ளம் பள்ளமாக வெடித்து சிதறி கிடப்பது மட்டுமின்றி பல இடங்களில் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
தற்போது நிலநடுக்கத்தில் படுகாயமடைந்தோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே நிலநடுக்க அதிர்வுகளால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது