வலி,வடக்கில் 27 வருடங்களின் பின்னர் வீடுகளை பார்க்க சென்றவர்கள் கண்ணீருடன் திரும்பினர்.

வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றத்திற்காக அழைக்கப்பட்ட மக்கள் இன்றைய தினமும் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் தங்கள் காணிகளை, வீடுகளை 27 வருடங்களின் பின்னர் ஆவலுடன் பார்க்க வந்த மக்கள் கண்ணீருடன் வீடுகளுக்கு திரும்பியிருக்கின்றனர்.
 
இன்றைய தினம் 9 கிராமசேவகர் பிரிவுகளில் ஜே.235 காங்கேசன்துறை தெற்கு, ஜே.236 பளைவீமன்காமம் வடக்கு, ஜே.237 பளைவீமன்காமம் தெற்கு, ஜே.238 கட்டுவன், ஜே.240 தெனியமலை, ஜே.241 வறுத்தலைவிளான், ஜே.244 வசாவிளான் கிழக்கு, ஜே.250 தையிட்டி தெற்கு, ஜே.252 பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மேற்படி கிராமசேவகர் பிரிவுகளில் மக்களுடைய விடுவிக்கப்பட வேண்டிய நிலங்களில் ஒரு பகுதி நிலங்கள் மட்டுமே விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் மேற்படி பகுதிகள் முழுவதும் முழுமையாக மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள், தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்கு வருகை தந்திருந்தனர்.
எனினும் மக்களுடைய மேற்படி 9 கிராமசேவகர் பிரிவுகளிலும் 1773.72 ஏக்கர் நிலத்தில் சுமார் 613 ஏக்கர் நிலம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக தங்கள் நிலங்களை பார்க்க வந்த மக்கள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல முடியாமல் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாரிய இராணுவ வேலிகளை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில்,
27 வருடங்களுக்குப் பின்னர் சொந்த நிலத்தை பார்க்கும் ஆவலுடன் வந்த எங்களை திருப்பி விட்டார்களே! என கண்ணீருடன் கூறிய மக்கள், கடந்த 27 வருடங்களில் பல அவல வாழ்க்கை நாங்கள் வாழ்ந்துவிட்டோம்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாங்கள் எங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்லலாம், நாங்கள் சொந்த நிலங்களில் நிம்மதியாக வாழலாம். என நினைத்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு நாங்கள் அலைக்கழிக்கப்படுகின்றோமே? என மக்கள் கண்ணீருடன் கூறிக்கொண்டு திரும்பி தங்கள் வாடகை வீடுகளுக்குச் சென்றிருக்கின்றனர்.