யாழில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமையினால் யாழ் குடாநாட்டிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வர்த்தக  நிலையங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் பட்டியல்படுத்தப்பட
வேண்டும் என யாழ். வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
யாழ்.வர்த்தக சங்கத்தில் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போதே சங்கத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த இன்றைய சந்திப்பு உணவக உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையிலான சந்திப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் வர்த்தக சங்க தலைவர் மேலும் கூறுகையில்,
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. எனவே உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்குமாறு
கேட்டிருந்தோம். ஆனால் அவ்வாறு குறைக்கப்படவில்லை. அது தொடர்பில் மக்கள் எமக்கு பல முறைப்பாடுகளை அனுப்புகிறார்கள்.
குறிப்பிட்ட சில பொருட்களின் விலைகள் மட்டும் குறைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அதனை மீறிச் செயற்படுகின்ற வர்த்தக நிலையங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மக்களும் வர்த்தகர்களும் புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியமானதாகும்.
எனவே வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்த வேண்டும். இதனால் பல தேவையற்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.