குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதை மெய்ப்பித்துக் காட்டிய பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுமி

பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த யாழ்.திருநெல்வேலியைப் பூர்விகமாகக் கொண்ட அகல்யா பாலசுப்பிரமணியம் என்ற எட்டு வயதுச் சிறுமி தனது பிறந்தநாளை கோப்பாயில் அமைந்துள்ள அன்னை திரேசா கன்னியர் மடம் அமைதி இல்லத்தில் அங்குள்ள
முதியவர்களுடனும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடனும் குடும்பத்தவர்களையும் அழைத்துச் சென்று அண்மையில் கொண்டாடினார்.
வருடம் தோறும் பிரான்ஸில் தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வரும் குறித்த சிறுமி இவ் வருடம் தனது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாட எண்ணியுள்ளார்.
குறித்த இல்லத்தில் வசிக்கும் 31 வரையான முதியவர்களுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிற்றுண்டிகள், தேநீர் என்பன பரிமாறி மகிழ்ந்தார்.
அத்துடன் அங்கிருந்தவர்கள் சிறுமியுடன் அளவளாவி மகிழ்ந்த விதம் அன்புக்காக ஏங்கித் தவிக்கும் அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தது.
அத்துடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதுடன் பிறந்தநாள் வாழ்த்துப்பாடலும் இசையுடன் பாடிச் சிறுமியை மகிழ்வித்தனர்.
வீட்டுக்கு ‘அன்னையர் இல்லம்;’ எனப் பெயர் சூட்டி விட்டு அன்னையரை முதியோர் இல்லத்தில் தவிக்க விடும் நன்றி மறந்த பிள்ளைகள் வாழும் தற்காலத்தில் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த குறித்த சிறுமியின் முன்னுதாரணமான செயற்பாட்டை அங்கு நின்றவர்கள் பலரும் பாராட்டினர்.
‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்பார்கள். அந்தக் கூற்றை மெய்ப்பித்திருக்கிறது கள்ளமில்லா இந்தப் பிஞ்சின் செயல்.
பிறந்தநாள், திருமணநாள், ஆலயக் கும்பாபிஷேகங்கள் எனப் பல்வேறு சடங்குகள், சம்பிராதயங்களுக்கு ஆடம்பரமாகப் பணம் செலவழிக்கும் நம்மவர்களுக்கு ஏன் இவ்வாறான எண்ணம் தோன்றவில்லை?
அனுபவம் சிறந்த ஆசான் என்பார்கள்.நாம் கற்ற கல்வியில் கிடைக்காத அறிவு முதியவர்களின் அனுபவத்தில் கிடைக்கிறது. அதனை நாம் அவர்கள் வாழும் போதே சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாங்களும் நாளை முதியவர்களாகும் நாள் வரும் என்பதை உணர வேண்டும். மூத்தோர்களுக்கு அன்பு, ஆதரவாக என்றும் துணை நிற்பதுடன் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துச் செயற்படுவோம்.
அது மட்டுமன்றி எமது மண்ணில் போரால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள், ஊனமுற்றவர்கள், அநாதைகள் ஆகியோரும் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து அன்பு செலுத்த வேண்டும்.
அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நம் அனைவருடையதும் கடமை. நாளைய தலைவர்களாக உலகை ஆளப் போகும் இளைஞர்கள், யுவதிகள் இது குறித்து அதிக சிரத்தையுடன் செயற்பட வேண்டும்.