ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த மாணவர்கள்

யாழ்ப்பாணம் – கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை (14.03.2015) பிற்பகல் 03 மணி முதல் பாடசாலை மைதானத்தில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவில் யாழ்.போதனா வைத்தியசாலையின் எலும்பு முறிவு சத்திரசிகிச்சைப் பிரிவின் வைத்திய நிபுணர் த.கோபிசங்கர் தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இதன் போது மனவிருத்தி குன்றிய மாணவர்களின் 50 மீற்றர் ஓட்டம், 75 மீற்றர் ஓட்டம், 100 மீற்றர் ஓட்டம், குண்டெறிதல், இசையும் அசைவும் நிகழ்வு போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

மனவிருத்தி குன்றிய நிலையிலும் அந்த மாணவர்கள் தமது ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் தமது விளையாட்டு ஆற்றலைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். இந்த விளையாட்டு நிகழ்வு மாணவர்களின் திறமைக்கு ‘ஊனம் ஒரு தடையல்ல’ என்பதை நிருபிப்பதாய் அமைந்திருந்தது.
இந்த விளையாட்டு நிகழ்வில் பெற்றோர்களுக்கான சங்கீதக் கதிரை, குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பந்தெறிதல் போட்டி என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.
இதேவேளை, நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.