யாழ்.மாவட்டத்தில் குடி நீருடன் கழிவு எண்ணெய்.35 ஆயிரம் பேர் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் குடி நீருடன் கழிவு எண்ணெய் கலந்துள்ளது என்று சந்தேகிக்கப் பட்ட இடங்களில் 11 ஆயிரத்து 472 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட, கழிவு ஒயில் நிலத்தடி நீருடன் கலந்துள்ளது. அதனால் வலிகாமத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. ஒரு சில இடங்களில், குடிதண்ணீர் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டன. அவற்றில் கழிவு ஒயில் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை கழிவு ஒயில் கலப்பால், யாழ்.மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில், 6 ஆயிரத்து 7 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 795 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 970 பேரும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 679 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 718 பேரும், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 211 குடும்பங்களைச் சேர்ந்த 694 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்போது குடிதண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது.