ரஷ்யாவின் முக்கிய எதிரணி அரசியல்வாதி சுட்டுக்கொலை

ரஷ்யாவில் முக்கிய எதிரணி அரசியல்வாதியும் முன்னாள் துணைப் பிரதமருமான போரிஸ் நேம்ஸோவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதிபர் மாளிகை உள்ள கிரெம்ளின் வளாகத்துக்கு அருகே உள்ள பாலம் ஒன்றை போரிஸ் நேம்ஸோவ் கடந்துகொண்டிருந்தபோது, காரில்
வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரின் பின்புறத்தில் நான்கு துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளார்.
யுக்ரெய்னில் நடக்கும் போருக்கு எதிராக மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை பேரணி ஒன்றை நடத்த அழைப்புவிடுத்து சில மணிநேரத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையை அதிபர் விளாடிமிர் புடின் கண்டித்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
எதிரணிச் செயற்பாட்டாளர் போரிஸ் நேம்ஸோவின் கொலை தொடர்பில் விசாரிப்பதற்காக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் குழுவொன்றை அதிபர் புடின் நியமித்துள்ளதாகவும் அவரது பேச்சாளர் கூறியுள்ளார்.
‘இஸ்லாமிய தீவிரவாதம்’ உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்தக் கொலைக்கான காரணங்கள் பற்றி விசாரித்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
‘கொடூரமான கொலை’ என்று இந்தக் கொலையை வர்ணித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அரசாங்கம் ‘உடனடியான, பக்கச்சார்பற்ற, வெளிப்படையான விசாரணை’ நடத்தவேண்டும் என்றுகேட்டுக்கொண்டுள்ளார்.
போரிஸ் நேம்ஸோவ் ‘ரஷ்யாவுக்கும் யுக்ரெய்னுக்கும் இடையே ஒரு பாலமாக திகழ்ந்தார்’ என்று யுக்ரெய்ன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறியுள்ளார்.