யாழ்.சுன்னாகத்தில் இன்று உதயமான தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம்

யாழ்.சுன்னாகம் நொதேர்ன் பவர் மின்சார நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் நிலத்தடி நீருடன் கலந்ததன் காரணமாக வலிகாமம் பகுதியிலுள்ள பல பகுதிகளின் நிலத்தடி நீர் மாசடைந்து காணப்படுகின்றது. இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான மக்களை ஒன்றிணைத்துத் தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் இன்று
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15.02.2015) காலை 09.30 மணியளவில் சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்ட மக்களனைவரதும் ஆதரவுடன் இந்த ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் தலைவராக பொறியியலாளர் ந.நந்தகுமார், செயலாளராக யாழ் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமயாற்றும் சி.சிவமைந்தன், உப தலைவராக ச.தஸீந்தன், பொருளாளராக சி.லகிந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பத்துப் பேர் கொண்ட நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவும் இடம்பெற்றது. அமைப்பின் ஆலோசகராக டாக்டர் இராஜலிங்கம் சிவசங்கர் மற்றும் ஊடக இணைப்பாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.றமேஷ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்பு அரசியல் எல்லைகள் மற்றும் அபிலாசைகளுக்கு அப்பால்,தன்னலம் சுயநோக்கங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மைக்குரலாக மற்றும் வினை திறனுடனான கட்டமைப்பாகப் பாதிக்கப்பட்ட மக்களிற்குப் பொறுப்புடைய மற்றும் வெளிப்படைத் தன்மை வாய்ந்த பாதிக்கப்பட்ட மக்களால் வினைத் திறனாகச் செயற்படக் கூடிய ஓர் தனித்துவம் பேணும் மக்கள் கூட்டிணைவாகச் செயற்படுமென அமைப்பின் அங்குரார்ப்பணத்தின் போது உறுதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது தலைவராக டாக்டர் இ.சிவசங்கரையும், செயலாளராக விரிவுரையாளர் சு.கபிலனையும் பலரும் இணைந்து தெரிவு செய்ய முயற்சித்த போதும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் அமைப்புக்கான நிர்வாகத்தைத் தெரிவு செய்வதில் சற்றுக் கால தாமதம் ஏற்பட்டதுடன் குழப்ப நிலையும் ஏற்பட்டது. எனினும் தாம் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.