யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலில் திருவீதியுலா வந்த உலகப்பெரு மஞ்சம்

யாழ். இணுவில் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கந்தசுவாமி கோவிலில் தைப்பூச திருநாளில் உலகத்தின் அதிஉயரமான மஞ்சம் என வர்ணிக்கப்படும் உலகப்பெரு மஞ்சம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருக்க இழுக்கப்பட்டது
.
வள்ளி-தெய்வானை சமேதரராய் ஆறுமுகப்பெருமான் தைப்பூச திருநாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மஞ்சத்தில் எழுந்தருள யாழ். குடாநாட்டில் இருந்தும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
ஈழத்தின் பிரபலம் மிக்க தவில்-நாதஸ்வர கலைஞர்கள் மங்கல வாத்தியம் இசைக்க, கரகாட்ட கலைஞர்கள் தமது கலையினை வெளிப்படுத்த மஞ்சம் ஊர் கூடி இழுத்து வரப்பட்டது.
இந்த கோவிலானது பெரிய சந்நியாசியார் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சந்நியாசியார் அருள்பாலித்த இடம் ஆகும்.
இவரின் முயற்சியினால் உருவாக்கப்பட்டதே இந்த உலகப் பெருமஞ்சம் ஆகும்.
இம் மஞ்சத்தின் தொடக்க பெரிய சந்நியாசியார் சஞ்சரித்த இடத்திலே அவரின் மேற்பார்வையின் கீழ் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு மஞ்சம் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது.
முப்பத்தைந்து அடி உயரமான இந்த திருமஞ்சத்திற்கு நான்கு சில்லும், மேலே ஐந்து கலசங்களும் பொருத்தப் பெற்றுள்ளன. இந்த அருமையான மஞ்சத்தில் வள்ளி, தெய்வயானை சமேதரமாக ஆறுமுக சுவாமி கொலுவிருந்து மகோற்சவத்தில் பன்னிரண்டாம் திருவிழாவன்றும், தைப்பூசத் திருநாளன்றும் திருவீதியில் ஊர்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை எட்டிப்பிடித்துள்ள இந்த மஞ்சத்தைப் போன்று ஒரு மஞ்சம் இலங்கையிலோ, இந்தியாவிலோ, வேறு எங்குமோ காணமுடியாது என தொல்பொருள் ஆராச்சியாளர் பலர் கூறியுள்ளார்கள்.
உலக பெருமஞ்சம் இது தான் என வரலாற்று அறிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். இந்த மஞ்சம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, நன்கு பேணுவதற்காக நாற்பதடி உயரமான மஞ்சக் கொட்டகையும் நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலானது யாழ். நகரில் இருந்து 6.5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.